Sunday, October 7, 2012

கண்ட வாங்கரி மாத்தாய்


PrintE-mail
- சாரதாமணி ஆசான்

பிறப்பு:
1940ஆம் ஆண்டு ஆப்பிரிக்கக் கண்டத்தில் கென்யா நாட்டில் நையேரி(Nyeri)என்ற கிராமத்தில் வாங்கரி மாத்தாய் பிறந்தார். அறியாமை இருளில் அகப்பட்டு, வறுமையின் பிடியில் சிக்குண்டு - தன்னம்பிக்கை இழந்து வாழும் தனது சமுதாயத்தை உயர்த்த பசுமை வெளி இயக்கம் (Green Belt Movement) கண்டார்.
இவ்வியக்கம் வாயிலாகத் தம் மக்கள் பசியைப் போக்கவும். சுயசிந்தனை பெற்று தலைநிமிர்ந்து வாழவும் வழிகண்டார்.
20 ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து மக்களிடை, சிறப்பாக மகளிரிடை விழிப்புணர்வு ஊட்டி 11 இலட்சம் கோடி மரங்களை நட்டார். இருண்டு கிடந்த இவரது கண்டத்தை உலக நாடுகள் அனைத்தும் திரும்பிப் பார்க்கும் அளவு சுற்றுச் சூழல் போராளியாகத் திகழ்ந்தார்.
எண்ணற்ற மரங்களை நடுவதால் நாட்டில் நல்ல மழை பொழியும் -_ அம்மழைப் பொழிவால் நிலம் வளம் பெறும் _ வறுமை அகலும் என்பதை நடைமுறைப்படுத்தினார்.
உயர்ந்த குறிக்கோளை நோக்கிப் பயணம் தொடரும்போது “We must not tire, we must not give up, we must persist” என்ற வாசகத்தை இவர் மக்களிடம் கொண்டு சேர்த்தார். நல்ல செயலைச் செய்யும்போது நாம் ஒருபோதும் களைப்படையக் கூடாது, கைவிடக் கூடாது _ பின்வாங்கக் கூடாது; உறுதியுடன் நின்று நிறைவு செயய் வேண்டும் என்பதே அவர் கூறிய வாசகம்.
கல்விப் பயணம்:
இத்தகு இலட்சியங்களைத் தாங்கிய இவர் 1964ஆம் ஆண்டு கான்சாஸ் மாநிலத்தில் உள்ள Mount - St. Scholastica கல்லூரியில் உயிரியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
1966ஆம் ஆண்டு அமெரிக்க அய்க்கிய நாட்டில் பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அடுத்து ஜெர்மன் நாட்டில் தமது உயர்கல்வியைத் தொடர்ந்தார். 1971ஆம் ஆண்டு Nairobi(நைரோபி) பல்கலைக் கழகத்தில் டாக்டர் (Ph.D) பட்டம் பெற்றார்.
கென்யாவில் முதல் முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெருமை இவரையே சாரும். ஆப்பிரிக்காக் கண்டத்தில் அளவிட இயலாத சூரிய ஒளி -_ விலைமதிக்க இயலாத வைரங்கள் -_ அடர்ந்த பச்சைப் பசேலென்ற காடுகள் -_ வற்றாத நீர்நிலைகள் _ வளமான மண் ஆகியன மிகுந்து காணப்பட்டன.
இவ்வளவு வளங்களைக் கொண்ட அந்தக் கண்டம் இன்று வறுமையின் பிடியில் சிக்குண்டு -_ தன்னம்பிக்கை இழந்து வாழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது; இந்நிலையிலிருந்து அந்தக் கண்டத்தை மீட்டெடுக்கும் அரிய பணியை இவர் தொடர்ந்து செய்தார்.
அதனால் 2004ஆம் ஆண்டில் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காகவும் _ உலக நாடுகளில் அமைதியான சூழலை உருவாக்குவதில் முன்னணியில் நின்றதற்காகவும் நோபல் பரிசு பெற்றார். ஆப்பிரிக்கக் கண்டத்தில் முதன்முதல் நோபல் பரிசைப் பெற்ற பெண்மணியும் இவரே.
ஆயிரம் மைல் பிரயாணம் என்பது ஒரு சிறு அடி எடுத்து வைப்பதில் தொடங்குகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுதல் _ உயிர்ச்சூழல் அழிதல் போன்ற உலகளாவிய பிரச்சினைகளை எப்படிச் சமாளிப்பது என்று தயங்கி சும்மா இருந்துவிட முடியுமா? நம்மால் ஆனதைச் செய்வோம் _ தன்னம்பிக்கை விதைகளை முதலில் விதைப்போம்.
அவை முளைத்து பெரிய மரமாகி மக்களை வாழ்விக்கும் என்ற கருத்துடன் இவர் ஒரு சிறுகதையை எடுத்துரைக்கிறார். அக்கதையின் சாரம் வருமாறு: தேன்சிட்டின் குரல்: (The humming bird) ஒரு பெரிய காடு _ அக்காட்டினை அழிக்க எதிர்பாரா விதத்தில் நெருப்பு சுற்றிலும் சூழ்ந்து கொள்கிறது.
காடு பற்றி எரிகிறது. அக்காட்டினை உறைவிடமாகக் கொண்ட யானை உள்படப் பெரிய பெரிய விலங்குகள் யாவும் தம்மைக் காத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்து அக்காட்டினை விட்டே விரைந்து ஓடுகின்றன.
ஆனால் தேன் சிட்டு மட்டும் (The humming bird) தனது சிறிய அலகில் நீரை நிரப்பித் தீ பரவாமல் இருக்கத் தன் அலகில் உள்ள நீரை எரியும் காட்டின் ஒரு பகுதியில் தெளிக்கிறது.
அச்சிட்டு தனது அலகில் நீரை நிரப்பவும் மீண்டும் மீண்டும் தீ பரவாமல் இருக்க அக்காட்டின் ஒரு பகுதியில் தெளிப்பதுமாக விரைந்து செயல்படுகிறது. இதைக் கண்ட பிற விலங்குகள் பறவையின் இச்செயலைக் கண்டு அது வீண்முயற்சி என்று எண்ணி ஏளனம் செய்தன.
சிறு துளிதானே பெருவெள்ளமாகப் பிரவாகம் எடுத்து ஓடுகிறது; அதுபோல் இச்சிறு முயற்சி தொடரும்போத வெற்றி நிச்சயம் என்னும் செய்தியை இக்கதை மூலம் சொல்லிச் சென்றுள்ளார் வாங்கரி மாத்தாய் எனும் அற்புத மங்கை.
அதாவது இக்கதை மூலம் இவர் சொல்ல வந்த செய்தி: ஓர் ஊரில் சிறிய அளவில் ஒருவர் துவங்கிய உயரிய குறிக்கோளை நோக்கிய பணி பின்னர் நாட்டளவில், அடுத்து உலகளவில் மக்கள் உள்ளங்களில் இடம் பிடித்து மகத்தான் ஆற்றலாக வெளிப்படும்.
அவ்வாற்றல் எதிர்காலத்தில் பெரும் மாற்றங்களைக் கொணர்ந்து சுற்றுச் சூழல் அழிவிலிருந்து இவ்வுலகைக் காப்பாற்றும் என்பதே.
அறிவில் மேம்பட்டு பேராசிரியர் பொறுப்பில் இருந்த வாங்கரி மாத்தாய் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார் என்பதற்கு அவர் கூறிய கீழ்க்கண்ட வார்த்தைகள் சான்று “I will be a humming bird.I will do the best I can.”
அம்மையார் பெற்ற பரிசுகள், பதவிகள்: சொல்லிச் சென்ற செய்திகள்:
1973லிருந்து 1980 வரை கென்யாவின் செஞ்சிலுவைச் சங்கத்தின் இயக்குநராகப் பதவி வகித்தார். காங்கோ பள்ளத்தாக்கின் வனமேம்பாட்டுத் தூதுவராக 2005லிருந்து 2011 வரை பொறுப்பேற்றார்.
அமெரிக்க அய்க்கிய நாடுகளின் அமைதித் தூதுவராக 2009லிருந்து 2011 முடிய ஆப்பிரிக்க யூனியனின் பொருளாதார, சமுதாய, நாகரிக மேம்பாட்டுக் கழகத்தின் மேலாளாக விளங்கினார். கென்யா குடியரசில் சுற்றுச் சூழலின் துணை அமைச்சராகச் செயல்பட்டார். இன்னும் இவர் பெற்ற தகுதிகளை விளக்கினால் விரியும்.
அங்கீகாரம் இல்லாத ஒரு கண்டத்தில் பிறந்த இவர் தன் விடா முயற்சியால் _ சான்றாண்மையால் _ அமைதியான ஆரவாரம் இல்லாத கடின உழைப்பால் உலகினையே தன் வசப்படுத்தியுள்ளார். உலகம் இத்தகைய சாதனையாளர்களைத்தான் எதிர்காலத்தில் நம்பி உள்ளது.

No comments:

Post a Comment